வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புதுச்சேரி - சென்னை இடையே அதிகாலை 3 - 4 மணி அளவில் கரையைக் கடந்தது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும் மழைப் பொழிவு இருந்துவந்தது. அப்படி கடந்த 16ஆம் தேதி இரவு புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
மறைமலை சாலை, இந்திரா காந்தி சிக்னல், ராஜீவ் காந்தி சிக்னல், பாவாணர் நகர், எழில் நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அடைப்பட்டுள்ளனர். நகரப் பகுதிகளுக்கு வரும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான சாலைகளில் அதிகப்படியான தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து பழுதாகிவருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மேலும், புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளான கிருஷ்ணா நகர், 45 அடி சாலை, ராஜீவ் காந்தி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம், எல்லைப்பிள்ளை சாவடி, மோகன் நகர், செயின்பால்பேட், தாகூர் நகர், வினோபா நகர், வேலன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுசெய்தார். மேலும், மழைநீரை அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.