உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஜொலிஜியம் அமைப்பு தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. இந்த ஜொலிஜியத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில், நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 26 நீதிபதிகளை இடம் மாற்றம் செய்ய ஜொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், அது தொடர்பான எந்தவித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்காமல் இருந்தது. அதே போல், பல்வேறு இடங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் கடந்த 10 மாதங்களாக 80 நீதிபதிகள் இன்னும் நியமிக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் சமீப காலமாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், பணியிட மாற்றத்தின் தொடர்பான ஜொலிஜியத்தின் பரிந்துரைகள் மீது முடிவெடுக்க மத்திய அரசுக்கு குறிப்பிட்ட காலவரம்பை நிர்ணயித்து கடந்த 2021 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், இந்த தீர்ப்பை மத்திய அரசு முறையாக பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டு பெங்களூர் வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சுதன்ஷு ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நாங்கள் திறமைசாலிகளை நீதிபதியாக்க வேண்டுமென விரும்புகிறோம். ஆனால், இந்த பணி நியமனத்தின் தாமதம் காரணமாக திறமையான நபர்கள் விரக்தியடைந்து தங்கள் பெயர்களை திரும்ப பெறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், திறமையான நீதிபதிகளை நாடு இழக்க வேண்டியிருக்கிறது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஜொலிஜியத்தின் 70 பரிந்துரைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. 9 பரிந்துரைகளை மத்திய அரசு திரும்ப பெறவோ அல்லது முடிவு தெரிவிக்கவோ இல்லை.
இதில், 26 பரிந்துரைகள் நீதிபதிகளின் பணியிட மாற்றம் தொடர்பானது. அதில் கூட மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருக்கிறது. இந்த அனைத்து பரிந்துரைகளுமே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து நிலுவையில் இருக்கின்றன. பல பரிந்துரைகளில் கடந்த 7 மாத காலமாக வெறும் ஆரம்ப கட்ட பணிகளை மட்டுமே மத்திய அரசு செய்துள்ளது. இனிமேல், இந்த விவகாரத்தை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இனி 10 அல்லது 12 நாள்களுக்கு ஒரு முறை இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிப்போம். மத்திய அரசு தொடர்ந்து நிலுவை விஷயங்களின் நிலை குறித்து தகவலை தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.