நீங்கள் கழிப்பறை சென்றுவிட்டு திருப்திகரமாக உணர்ந்தால் மட்டும் காசுபோடுங்கள் என்கிறது வெஸ்டர்ன் ரயில்வே. இந்தியாவிலேயே முதன்முறையாக வெஸ்டர்ன் ரயில்வே மும்பையின் சில முக்கிய புறநகர் ரயில்நிலையங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ரயில்நிலையத்திலும் காசுகொடுத்துச் செல்லும் கழிப்பறைகளும் இலவசக் கழிவறைகளும் உள்ளன. ஆனால், தங்களுக்கு லாபம் கிடைக்கும் கட்டணக் கழிப்பறைகளை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் சுத்தமாக வைத்திருப்பார்கள். அதை மாற்றத்தான் இந்த திட்டமாம்.
இந்த புதிய திட்டப்படி கட்டணக் கழிப்பறைகள் வழக்கம்போல் செயல்படும். இலவசக் கழிப்பறைகளில் ஒரு பெட்டி மாட்டப்படும். ஒப்பந்ததாரர்களிடம், ‘இந்தப் பெட்டியில் விழும் பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் பணம்விழுவது இந்தக் கழிப்பறைகளை நீங்கள் சுத்தமாக வைத்துக்கொள்வதைப் பொறுத்தது’ என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்துமாம்.
அதேசமயம், இலவசக் கழிப்பறைகளுக்கு வரும் யாரும் கட்டாயமாக பணம் போடவேண்டிய அவசியமில்லை. கழிப்பறை தூய்மையாக இருப்பதைப் பார்த்து, விரும்பினால் தாங்கள் விரும்பும் பணத்தைப் பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லலாம். இலவசக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வெஸ்டர்ன் ரயில்வே எடுத்திருக்கும் நடவடிக்கை ஆக்கபூர்வமானதுதான். இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் வெஸ்டர்ன் ரயில்வே முழுக்க இத்திட்டம் விரிவுபடுத்தப்படுமாம்.