உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மலேசியாவிலிருந்து இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்களையும், பயணிகளையும் மீட்க இந்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மலேசியாவில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களில் 150 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நிறைய இந்திய மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்கள் நாடு திரும்புவதற்காக வந்திருந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கரோனா பாதிப்பு காரணமாக மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான தடையை இந்திய அரசாங்கம் பிறப்பித்திருந்தது. இதனால் 200 மாணவர்களும் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஏர் ஏசியா விமானங்கள் மூலம் மாணவர்கள் டெல்லி மற்றும் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என தற்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார்.