கடந்த மாதம் 29-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (03.02.2021) மாநிலங்களவையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் கேள்வியெழுப்பினர். தமிழக மீனவர்கள் நான்கு பேரைக் கொன்றுவிட்டதாக தெரிவித்த திமுக எம்.பி திருச்சி சிவா, அடிக்கடி பாதிக்கப்படுவதால் மீன்பிடி தொழிலை விட்டுவிட தமிழக மீனவர்கள் யோசிக்கிறார்கள் என்றார். அதேபோல் கடற்படையின் தாக்குதலுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரையும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக நடடிக்கை எடுத்து தமிழக மீனவர்களைக் காக்க வேண்டும் எனவும் தம்பிதுரை வலியுறுத்தினார்.
அதனையடுத்து, இச்செயலில் ஈடுப்பட்ட இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநர் உரையில் இலங்கை கடற்படையின் செயலால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.