தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஓமிக்ரான்' எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், 'ஓமிக்ரான்' தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன.
குறிப்பாக, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து வரும் டிசம்பர் 15- ஆம் தேதி அன்று தொடங்கப்படவிருந்த நிலையில், அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி வந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 'ஓமிக்ரான்' நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் 'ஓமிக்ரான்' கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே, கர்நாடகாவில் 2 பேருக்கும், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் 'ஓமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.