மத்திய பிரதேசம் மாநிலம் ஹர்தா என்ற இடத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் பணியில் இருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையின் அருகே உள்ள 60 வீடுகளுக்கு தீ பரவியதால் அசாதரண சூழல் நிலவி வருகிறது. இந்த வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி அளித்து மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட மத்தியப் பிரதேச அமைச்சர் உதய் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், “மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து பேசினேன். காயமடைந்தவர்கள் ஹோஷங்காபாத் மற்றும் போபாலில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மைக் குழு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். தொழிற்சாலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.