உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நாளை கும்பமேளா தொடங்க உள்ளது. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தியாவின் மிகப்பெரிய கும்பமேளா விழாவாகும். கும்பமேளா நாளை தொடங்க உள்ள நிலையில் கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள திகம்பர் அகதா பகுதியில் விழாவுக்கு வருகை தருவோர் தங்குவதற்கு தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த குடியிருப்புப் பகுதியில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கும்பமேளாவிற்கு பேரழிவு மேலாண்மையின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சஹாய் இதுகுறித்து கூறுகையில், ‘‘மதியம் 12.45 அளவில் குடிசை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 ஆம்புலன்ஸ், 1 ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் ஆகியவை வரவைக்கப்பட்டன. மேலும் இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை" என கூறினார்.