பொதுவெளியில் குப்பையைக் கொட்டியதற்காக, பஞ்சாப் முதலமைச்சர் வீட்டிற்கு அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது மாநகராட்சி.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானின் இல்லம், சண்டிகரில் உள்ள செக்டார் 2 பகுதியில் அமைந்துள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் உள்ள சிஆர்பிஎஃப் பட்டாலியன் டிஎஸ்பி ஹர்ஜிந்தர் சிங்கின் (DSP Harjinder Singh) பெயருக்கு சண்டிகர் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், பொதுவெளியில் குப்பையைக் கொட்டியதற்காக, 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அபராதத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் சண்டிகர் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "முதலமைச்சரின் இல்லத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக, எந்தவொரு நோட்டீஸும் வரவில்லை. செக்டார் 2- ல் உள்ள 7- ஆம் எண் வீட்டிற்கு அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வீட்டில் துணை ராணுவப் படையின் வீரர் வசித்து வருகிறார். இந்த வீட்டிற்கும், முதலமைச்சருக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை.
எனவே, பஞ்சாப் மாநில முதலமைச்சர் இல்லத்திற்கு அபராதத் தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வெளியான அனைத்து செய்திகளும் தவறானவை" எனத் தெரிவித்துள்ளார்.