
மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், "நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆறாவது ஊதியக்குழுவில் பண்டிகை கால முன்பணம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், பொருளாதார சூழலைக் கருத்தில்கொண்டு மீண்டும் முன்பணம் வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக ரூ.10,000 வட்டியில்லாமல் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இந்த 10,000 ரூபாய், ரூபே ப்ரீபெய்ட் கார்டில் வழங்கப்படும் எனவும், இந்த கார்டில் உள்ள தொகையை 2021, மார்ச் 31-ம் தேதி வரை செலவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.10,000 ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு பிடித்தம் செய்யப்படும். இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.4,000 கோடி செலவிடுகிறது.