பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தலைமை, கட்சிக்குப் பெரிய அளவில் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார். இந்தநிலையில், லக்னோவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், இரவு 12 மணிக்கு கூட பெண் ஒருவர் நகைகளை அணிந்துகொண்டு ஸ்கூட்டி ஒட்டிச் செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது,
"உத்தரப்பிரதேச மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். ஆனால், உத்தரப்பிரதேசத்தை நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற இன்னும் ஐந்து ஆண்டுகள் தேவை. பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தின் எம்.பி.யாக இருக்கிறார். அவரை 2024இல் நீங்கள் பிரதமராக பார்க்க வேண்டுமென்றால், யோகி ஆதித்யநாத்தை 2022இல் முதல்வராக்க வேண்டும். 2024இல் மீண்டும் பிரதமர் மோடிக்கு வாய்ப்பளிப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படும் தேதியைப் பாஜகவினர் வெளியிட மாட்டார்கள் என்று அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினார். ராம பக்தர்களை சுட்டுக் கொன்றது சமாஜ்வாதி ஆட்சிதான் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நமது ஆட்சியில், விரைவில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படும். முன்பு உத்தரப்பிரதேசம் பொருளாதாரத்தில் ஏழாவது இடத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், எளிதாக வணிகம் செய்வதற்கான குறியீடு மேம்பட்டு, இன்று உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் அரசுகள் பல ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தை தங்கள் விளையாட்டு மைதானமாக வைத்திருந்தனர். மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வெளியேறும் அளவுக்கு மக்கள் சோர்ந்து போயினர். இன்று இவை மாறிவிட்டன. நான் மாஃபியாக்களைக் கண்டுபிடிக்க விரும்பி, தொலைநோக்கியைப் பயன்படுத்தியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு 12 மணிக்கு கூட ஒரு பெண் நகைகளை அணிந்துகொண்டு ஸ்கூட்டியை ஓட்டிச் சொல்லலாம். ஏழைகளுக்கு சிமெண்ட் வீடுகள் மற்றும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.