
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86 வது கூட்டம் டெல்லியில் நேற்று (12.09.2023) நடைபெற்றது. அப்போது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர், வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தார். இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.
இதையடுத்து கர்நாடக அரசு சார்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான் சவுதாவில் சிறப்பு அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அரசியல் கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மூத்த அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிலையில் கர்நாடகம் இல்லை. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட இந்த கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.