தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மகள் அனைவரின் அன்பையும் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன் லால் ( வயது 49). இவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர் முடிவு செய்தபோது, மோகன் லாலின் இளையமகன் தான் தனது சிறுநீரகத்தைத் தானமாக தர முன்வந்துள்ளார். ஆனால், அது மோகன் லாலுக்கு பொருந்தாது எனத் தெரிந்த நிலையில், அவரது மகள் ஹீனா டபியார் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.
ஹீனா முதுகலைப் பட்டம் முடித்த 24 வயது திருமணமாகாத இளம்பெண். இவர் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தால், அது அவரது மணவாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலரும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எங்களை கவலையின்றி வளர்த்த அப்பாவிற்கு இதைச் செய்ய நான் பெருமைப்படுகிறேன் என ஹீனா தெரிவித்துவிட்டார். மேலும், ஒரு கிட்னி இல்லாததை காரணமாகக் காட்டி என்னை ஒருவர் மணக்க மறுத்தால், அவரோரு வாழ்நாள் முழுவதும் வாழ்வதில் பிரயோஜன் இருக்காது. என்னை ஏற்றுக்கொள்ள ஒருவர் கிடைப்பார் என ஹீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி ஹீனா தனது சிறுநீரகத்தை தந்தை மோகன்லாலுக்கு தானமாக வழங்கினார். தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர். திருமணம் ஆகாத ஒரு பெண் தனது தந்தைக்கு சிறுநீரகத்தைத் தானமாக கொடுப்பது அரிதிலும், அரிது. ஹீனா பேரன்பிற்கும், பாராட்டுக்கும் உரியவர் என மோகன்லாலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.