பாதுகாப்புப் பணியின்போது பணம் கேட்டு தொல்லை செய்ததால் மகனைத் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சேஷக்குமார் என்ற மகன் உள்ளார். காவலர் பிரசாத், மதுப் பழக்கம் காரணமாக வீட்டுக்குச் சம்பளப் பணத்தைத் தராமல் இருந்துள்ளார். இதனால், குடும்ப உறுப்பினர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்றுடன் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கொண்ட பழைய மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஒரு குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அந்த குடோனில் காவலர் பிரசாத் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது மகன் சேஷக்குமார், பிரசாத்திடம் ஏ.டி.எம் கார்டை கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பிரசாத், தனது கையிலிருந்து துப்பாக்கியைக் கொண்டு மகன் சேஷக்குமாரின் மார்பில் சுட்டார். இதில், படுகாயமடைந்த சேஷக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சேஷக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகனைக் கொன்ற காவலர் பிரசாத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனைத் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.