மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை (13.02.2024) விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஹரியானாவில் உள்ள அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் நேற்று (11.02.2024) காலை 6 மணி முதல் நாளை இரவு 11.59 மணி இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு நாளை விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தாராய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதேசமயம் உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனையடுத்து டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க ஹரியானா மாநில எல்லையில் உள்ள சாலைகளில் இரும்பு ஆணிகள், கான்கீரிட்களை கொண்டு பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் மாநிலங்களை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சிங்கூர் எல்லையில் சாலையின் நடுவே பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. போராட்டம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவதை தடுக்கவும் சமூக வலைத்தளங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தடுக்கும் வகையில் ஹரியானாவில் டீசல் விற்பனைக்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் டிராக்டர் ஒன்றுக்கு 10 லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக்கூடாது எனவும் ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.