மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதற்கு முன், அரசுக்கும் விவசாயிகளுக்கும் நடந்த ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், 10வது கட்ட பேச்சுவார்த்தையின்போது, வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயாராக இருப்பதாகவும், விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டுமெனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வந்த விவசாயிகள், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு என்ற விவசாய குழு, "எங்கள் மீது வலையை வீசுவது, இனிப்புகளுக்குள் விஷத்தை மறைப்பதே அரசின் யுக்தி. போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள். எங்கள் கூட்டத்தில், அவர்களின் கோரிக்கையை நிராகரிப்பதாக ஒரு மனதாக தீர்மானித்துள்ளோம்" என கூறியுள்ளது.
மேலும் அந்த அமைப்பு, இன்றைய பேச்சுவார்த்தையின்போது குறைந்தபட்ச ஆதரவிலை மற்றும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது பற்றி விவாதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.