
அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொண்டர்கள் கூட்டத்திற்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி ஒருவரை, மர்ம நபர்கள் சிலர் கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில், அசாம் மாநிலத்தில் உள்ள துப்ரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரஹிபுல் ஹுசைன். 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை தோற்கடித்தார். இந்த நிலையில், நாகோன் மாவட்டத்தில் ரூபாகிஹாட் என்ற இடத்திற்கு தனது தொண்டர்களை சந்திப்பதற்காக ரஹிபுல் ஹுசைன் நேற்று (20-02-25) சென்றார்.
புதிய மார்க்கெட் வழியாக ரஹிபுல் ஹுசைனும் அவரது மகன் ஆகியோரும் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி அங்கு வந்தனர். திடீரென அவர்கள், தாங்கள் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை வைத்து எம்.பி ரஹிபுல் ஹுசைனை சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுக்க போன பாதுகாப்பு அதிகாரிகளையும், அந்த கும்பல் தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்களை கலைக்கவும், எம்.பி ஹுசைனின் பாதுகப்பை உறுதி செய்யவும், பாதுகாப்பு அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதன் பிறகு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, காயமடைந்த ரஹிபுல் ஹுசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.பி ரஹிபுல் ஹுசைனை மர்ம நபர்கள் கிரிக்கெட் மட்டையால் தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.