Skip to main content

“அணுகுமுறைகள் ஒன்றிணைந்தால் நாட்டிற்கு நல்லது” - மம்தா செயல்பாடு குறித்து ப.சிதம்பரம் கருத்து!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

p chidambaram

 

2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. அண்மையில் மும்பை சென்று மஹாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அம்மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்த மம்தா, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

 

இதனால் மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமையுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் சிவசேனா காங்கிரஸ் கூட்டணியில் தொடரப்போவதை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் கோவாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், காங்கிரசின் அணுகுமுறையும் மம்தாவின் அணுகுமுறையும் இணைவது நாட்டிற்கு நல்லது எனக் கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர், "மம்தா என்னுடைய நண்பர். எனக்கு அவரை 20-25 வருடங்களுக்கு மேலாகத் தெரியும். அவருக்கு ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை உள்ளது, எங்களுக்கு வேறு ஒரு வகை அணுகுமுறை உள்ளது. இரண்டு அணுகுமுறைகளும் ஒன்றிணைந்தால் அது நாட்டிற்கு நல்லது. சஞ்சய் ராவத் மிகவும் பொறுப்பான கருத்தை கூறியுள்ளார் என நினைக்கிறேன். நாட்டில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி தேவை என்றும், காங்கிரஸ் கட்சி தலைமை ஏற்று அனைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் கூற வருகிறார். இது மிகவும் விவேகமான கருத்து என நான் நினைக்கிறேன். நான் சஞ்சய் ராவத்துடன் முழுமையாக உடன்படுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்