Skip to main content

கோரிக்கை வைத்த அமித்ஷா... நிபந்தனை விதித்த விவசாயிகள்... ஸ்தம்பிக்கும் டெல்லி!!!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

farmers conditions to center on delhi chalo rally

 

 

விவசாயிகள் போராட்டம் குறித்து அமித்ஷா வைத்த வேண்டுகோளை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர். 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்குக் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின் புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விவசாயிகள் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி புறநகர் பகுதி முழுதும் ஸ்தம்பித்துள்ளது.  

 

இந்நிலையில், விவசாயிகள் புராரி பகுதியில் போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என்றும், அப்படி செய்தால் மத்திய அரசு நிர்ணயித்த தேதிக்கு (டிச.3) முன்பாகவே விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமித்ஷாவின் இந்த கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகள் விவகாரத்துக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகத்தின் தலையீடு என்பது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை மறைமுகமாக மிரட்டும் விதமாகவே இருக்கிறது. இந்த அணுகுமுறையை மத்திய அரசு முதலில் கைவிட வேண்டும்.

 

விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களால் இந்த விஷயத்துக்கு நேரடியாகத் தீர்வு காண முடியும் என நாங்கள் நம்பவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது, டெல்லியில் அன்னா ஹசாரே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரத்தியேக மத்திய அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டது. அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவைக் குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும். மிக முக்கியமாக, எந்த முன்நிபந்தனையும் இன்றி விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒருபோதும் உடன்பட மாட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்