இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே இன்று (29.11.2021) தொடங்கியது. இந்தநிலையில், மக்களவை கூடியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவை மீண்டும் கூடியதும், ஏற்கனவே அறிவித்தபடி மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளிக்கிடையே, மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி, வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என கோரியது.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.