மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், பல்வேறு போராட்டடங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திய அவர்கள், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை, வீடு திரும்பப் போவதில்லை என்ற முடிவில் தீவிரமாக உள்ளனர்.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான பிரியம்வாடா தோமர், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியிலிருந்தும், உத்தரப்பிரதேச மகளிர் ஆணையத்திலிருந்தும் விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தில் அவர், விவசாயிகளின் போராட்டம் நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பாஜக தலைமையிலான அரசுகளால், விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதனால், கட்சியிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார்.
மேலும், மகளிர் ஆணையத்தில் இருந்து விலகியது குறித்து அவர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெண்களை பாஜக, புறக்கணித்து விட்டதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் விரைவில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.