கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடக மாநில பாஜக தலைவராக அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயேந்திராவை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் கர்நாடக மாநில சட்டமன்றத்திற்கு பாஜக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நியமனம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க.வின் அனைத்து தலைவர்களும், தி.மு.க., காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலின் பிடியில் சிக்கியிருக்கிறது என தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரங்களுக்காக வேறு மாநிலங்களுக்கு செல்லுமிடத்திலும் வாரிசு அரசியல் குறித்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் முன்னாள் முதல்வரான பா.ஜ.க.வைச் சேர்ந்த எடியூரப்பாவின் மகன் அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பலராலும் வாரிசு அரசியல் என விமர்சிக்கப்பட்டுவருகிறது.