மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு 9வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் மேற்கு வங்க முதல்வர் மவுத்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் தந்தை, முதல்வர் மம்தா பானர்ஜி மீதான நம்பிக்கை போய் விட்டதாக பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
'இந்த சம்பவத்தில் நீதி வேண்டும் என்று கூறிய மம்தா பானர்ஜி தற்பொழுது நீதி கேட்டுப் போராடும் சாதாரண மக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஒரே ஒரு நபர் மட்டும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவை சேர்ந்த நபர்கள் மீது உறுதியான சந்தேகம் எங்களுக்கு உள்ளது. அதேபோல் உடல்கள் தகனம் செய்யப்படும் இடத்தில் பல்வேறு உடல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய மகளின் உடலை மட்டும் முதலில் எரித்துள்ளனர். அவசர அவசரமாக என்னுடைய மகளின் உடல் எரிக்கப்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன?' என கேள்விகளை எழுப்பியுள்ளார் உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவரின் தந்தை.