Skip to main content

எதற்காக மன்னிப்பு கேட்டார் வினோத் ராய்? 

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

vinod rai

 

இந்தியாவையே உலுக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்று, 2ஜி அலைக்கற்றையில் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதற்காக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு. முதன்முதலில் இந்தக் குற்றச்சாட்டை  வைத்தவர் அப்போதைய மத்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய். அவர் தனது தணிக்கை அறிக்கையில் 2ஜி அலைக்கற்றையில் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

 

இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் 2ஜி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு நடைபெற்றது. இறுதியில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2ஜி ஊழல் குற்றச்சாட்டில் அடிப்படையே இல்லை எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

இதற்கிடையே மத்திய அரசின் முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய், அவதூறு வழக்கில் காங்கிரசின் முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபமிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வினோத் ராய் தான் எழுதிய புத்தகம் ஒன்றில், 2ஜி ஊழல் குற்றச்சாட்டில் பிரதமர் பெயரைச் சேர்க்க வேண்டாம் என தனக்கு அழுத்தம் கொடுத்த எம்.பி.க்களில் ஒருவர் சஞ்சய் நிருபம் என குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை சில நேர்காணல்களிலும் பதிவுசெய்தார். இதனைத்தொடர்ந்து சஞ்சய் நிருபம், அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தநிலையில் நேற்று (28.10.2021) வினோத் ராய், தனக்கு அழுத்தம் கொடுத்த எம்.பிக்களின் பட்டியலில் சஞ்சய் நிருபத்தின் பெயரைத் தவறுதலாக குறிப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் கூறி, அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனையடுத்து இந்த அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

 

இந்தநிலையில், தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் நிருபம், 2ஜி மற்றும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதால், அதற்காக வினோத் ராய் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்