பீகார் மாநிலம், மகாராஜ்கஞ்ச் என்ற நாடாளுமன்றத் தொகுதியில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 3 முறையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் ஒரு முறையும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் பிரபுநாத் சிங். கடந்த 1995 ஆம் ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, எம்.எல்.ஏ.வாக இருந்த பிரபுநாத் சிங், பீகார் மக்கள் கட்சியின் சார்பாக எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட்டார்.
இந்த நிலையில், அந்த தேர்தலில் தனக்கு வாக்கு அளிக்காத ஷப்ரா பகுதி மக்கள் மீது பிரபுநாத் சிங் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் ஷப்ராவில் உள்ள வாக்குச் சாவடியின் அருகே ராஜேந்திர ராய் உள்பட 3 பேரை தனது துப்பாக்கியால் பிரபுநாத் சிங் சுட்டார். அதன் பிறகு, காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், ராஜேந்திர ராய், தரோகா ராய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் பிரபுநாத் சிங் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பாட்னா விரைவு நீதிமன்றம், பிரபுநாத் சிங்குக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று பிரபுநாத் சிங்கை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, இவரின் விடுதலையை எதிர்த்து ராஜேந்திர ராயின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், ஏ.எஸ். ஓகா, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இரட்டைக் கொலை வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பிரபுநாத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், அந்த தீர்ப்பில் இறந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்குமாறு பிரபுநாத் சிங்குக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட்டனர்.