இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமானச் சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
10 மடங்கு வேகமாகப் பரவும் ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது.
மும்பையில் புதிய வகை உருமாறிய ஒமைக்ரான் XE கண்டறியப்படவில்லை. சந்தேகத்திற்கிடமான மாதிரியை ஆய்வு செய்ததில் அது ஒமைக்ரான் XE கரோனாவுடன் ஒத்துப் போகவில்லை. ஒமைக்ரான் XE உள்ளதாகக் கூறப்பட்ட 50 வயது பெண் முழு தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவிலிருந்து பிப்ரவரி 10ஆம் தேதி நாடு திரும்பிய பெண்ணுக்கு அறிகுறிகளோ, இணைநோய்களோ இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.