நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி (23.07.2024) தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.
அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும், சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த எனது பேச்சுக்காகத் எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே அமலாக்கத்துறையினரின் வருகைக்காகத் தேநீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.