குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வல்லபாய் படேலின் சிலைக்கான பார்வையாளர் கட்டணத் தொகையை வங்கியில் செலுத்தாமல் ரூ.5.24 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலை அம்மாநிலத்தின் மிகமுக்கிய சுற்றுலா தளமாக உருவெடுத்துள்ளது. இந்த சிலையைக் காண வரும் பார்வையாளர்களிடம் பார்வையாளர் கட்டணம் வசூலித்து, அந்த தொகையைத் தனியார் ஏஜென்சி ஒன்றின் மூலம் வதோதராவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2018 நவம்பர் முதல் 2020 மார்ச் வரை பார்வையாளர் கட்டண வசூல் தொகைக்கும் வங்கி டெபாசிட் தொகைக்கும் இடையே பெரும் வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வங்கி நடத்திய விசாரணையில், வசூலித்து வந்த தொகையை வசூல் ஏஜென்சி ஊழியர்கள் வங்கியில் செலுத்தாமல் ரூ.5,24,77,375 ஊழல் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி அளித்த புகாரின் பேரில் ஏஜென்சி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.