மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி வனப்பகுதி சாலையில், பைக்கில் இருந்து தவறுதலாக கீழே விழுந்த 4 வயது சிறுமியை, மற்ற யானைகள் தாக்காமல் இருக்கும் வகையில், தனது கால் இடுக்கில் வைத்து யானை ஒன்று பாதுகாத்த சம்பவம் நடந்துள்ளது.
யானைகள் அதிக அளவு வாழும் ஜல்பைகுரி வனப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை 31 செல்கிறது. அந்த நெடுஞ்சாலையில், லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். என்பவர், தனது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியை யானை கூட்டம் ஒன்று கடக்க தனது வண்டியை நிறுத்தி யானைகள் செல்லும் வரை காத்திருந்திருக்கிறார்.
பின்னர் தனது வண்டியை எடுத்துக்கொண்டு முன்னே செல்லும் போது திடீரென வேறொரு யானை கூட்டம் சாலையின் குறுக்கே வந்தது. இதனால் வண்டியை பிரேக் அடித்து நிறுத்த முயன்றபோது, சாலையில் பைக் கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டனர். அவரது 4 வயது குழந்தையும் கீழே விழ, அந்த வழியாக வந்த ஒரு யானை அந்த சிறுமியை தனது கால்களுக்கு மத்தியில் வைத்து மற்ற யானைகள் எல்லாம் செல்லும் வரையில் பாதுகாத்தது. மற்ற யானைகள் சாலையை கடக்கும்போது அந்த சிறுமியை மிதிக்காமல் பத்திரமாக பாதுகாத்த அந்த யானை, அனைத்து யானைகளும் சென்ற பின் அந்த சிறுமியை விட்டு நகர்ந்து சென்றது.