மக்களவை தேர்தலுக்கு பின்னர் புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்காக அரசு மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும், பிரதமர் மோடியின் முந்தைய 5 ஆண்டுகளில் மேற்கொண்ட பணிகள் குறித்தும் அவர் ஒரு மணி நேரம் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் விளக்கமாக பேசினார்.
பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ரேபரேலி மக்களவை உறுப்பினரும் தனது தாயாருமான சோனியா காந்தியுடன் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி குடியரசுத் தலைவரின் உரையில் கவனம் செலுத்தாமல் தனது செல்போனில் அதிக நேரம் செலவழித்தார். குடியரசுத் தலைவர் உரையை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த சோனியா காந்தி, அவ்வப்போது பாராட்டவும் செய்தார் இருப்பினும் அவர் அருகில் அமர்ந்திருந்த ராகுல்காந்தி தொடர்ந்து மொபைலில் கவனம் செலுத்தி வந்தார்.
இதன் ஒரு பகுதியாக பாலகோட் சர்ஜிக்கல் தாக்குதல்கள் குறித்து குடியரசுத் தலைவர் பேசியபோது அவையில் இருந்த சோனியா காந்தி உள்ளிட்ட பெரும்பாலனவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர், அப்போதும் கூட ராகுல் அவரது மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தார். ராகுலின் இந்த செயலை கண்ட சோனியா காந்தி சிறிது நேரம் அவரை உற்று நோக்கிய போதும் கூட அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் ராகுல் காந்தி நீடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் முக்கிய கூட்டத்தொடரில் அவரின் இந்த செயல் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.