குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையை மக்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்குவங்கம் மாநிலம் ஜார்கிராம் பகுதிக்குள் 5 யானைகளை கொண்ட கூட்டம் ஒன்று புகுந்தது. இதனால் அச்சமடைந்த அங்கிருந்த மக்கள் யானைகளை விரட்ட முற்பட்டனர். அப்பொழுது இரும்பு கம்பிகளின் நுனிப்பகுதியில் துணியைச் சுற்றி தீப்பந்தம் போல உருவாக்கி அந்த பகுதி மக்கள் ஒன்றாக கூடி யானைகளை தாக்கியுள்ளனர். சிலர் துணிகளை பயன்படுத்தி நெருப்பு பந்துகளை உருவாக்கி யானைகள் மீது வீசினர்.
இதில் பெண் யானையின் மீது வீசப்பட்ட நெருப்பு பந்து யானைக்கு தீக்காயத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நெருப்பு பந்து தாக்குதலால் பெண் யானை சரிந்து கீழே விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வனத்துறையினரின் கண் முன்னே இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் வனத்துறையால் மீட்கப்பட்ட அந்த பெண் யானை சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி பெண் யானை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் வனத்துறையினரின் முன்னே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறவில்லை என வனத்துறை சார்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.