தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை (06/04/2021) நடைபெறுகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிக்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் மாநில காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் ஆகிய இரு தொகுதிகளில் ரங்கசாமி போட்டியிடுகிறார். இதில், ஏனாம் தொகுதியில் துர்கா பிரசாத் பொம்மடி என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், சில நாட்களாக துர்கா பிரசாத்தைக் காணவில்லை என்று அவரது மனைவி நேற்று (05/04/2021) ஏனாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் பிரச்சாரத்துக்குச் சென்ற கணவரைக் கடந்த 1-ஆம் தேதி முதல் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு காவல்துறை அறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுயேச்சை வேட்பாளர் காணவில்லை என்ற அவரது மனைவியின் புகார் ஏனாம் வேட்பாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் 31 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாம் மாநிலத்தில் 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவும் நாளை (06/04/2021) நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.