எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர இன்று நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில் 1:30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடக்கும் தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ் மொழியில் 31,803 பேர் என தமிழகத்திலிருந்து மொத்தம் 1,42,286 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வை மொத்தமாக 18.72 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அதில் 10, 64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர்கள்.
ஆடை கட்டுப்பாடு உள்ளிட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடைபெறும் நீட் தேர்வில் சரியான பதிலுக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப்பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக் கொள்ள வேண்டும். பிற்பகல் 1.30 க்கு நீட் தேர்வு மைய நுழைவு வாயில் மூடப்படும். அதன் பின்வரும் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை அவசியம். வாட்ச், பெல்ட், ஷூ, கம்மல், மூக்குத்தி, தலை கிளிப் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது.
நீட் தேர்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் என்-95 முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் உரிய இடத்தில் இருக்க வேண்டும். தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரு முறை மாணவர்கள் பதிவேட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும். மாணவர்கள் வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்கள் வைத்திருக்கலாம். செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதன பொருளையும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குக் கொண்டு வரக்கூடாது என தேசிய தேர்வு முகமை வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.