உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர்,கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் இந்த தேர்தல்களுக்கான தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், கரோனா பரவலை கருத்தில்கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபட அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்தநிலையில் இன்று அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளரும் கலந்துகொண்டார்.
இந்தநிலையில் இந்த ஆலோசனையை தொடர்ந்து தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை தளர்த்தியும், சில கட்டுப்பாடுகளை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது. அரங்கங்களில் நடைபெறும் கூட்டங்களில் இதற்கு முன்பு 300 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இனி 500 நபர்கள் அரங்கங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய 10 நபர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 20 பேர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் நடைபெறும் கூட்டங்களில் 1000 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சாலை பேரணி, பாத யாத்திரை, சைக்கிள் மற்றும் வாகன பேரணிகளுக்கு பிப்ரவரி 11 ஆம் தேதி தடையை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.