ஆப்பிள் நிறுவனம் தனது 'ஐபோன் 11' மொபைலை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது.
உலகளவில் மொபைல் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையைப் பெருக்க நீண்டகாலமாக திட்டமிட்டு வந்தது. அதிக விலை காரணமாக சாமானிய நடுத்தர வர்க்க இந்தியர்களின் கைக்குச் சென்றடையாத இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை அனைவரிடமும் கொண்டுசேர்க்க, தற்போது இந்தியாவில் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். தமிழகத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 'ஐபோன் 11' மொபைல் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவை நம்பியிருக்கும் நிலையை மாற்றவும் ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 'ஐபோன் 11' மொபைல்களும் விற்பனை செய்யப்படுவதால் தற்போதைக்கு விலை குறைவுக்கு வாய்ப்பில்லை எனவும், ஆனால், உள்ளூர் உற்பத்தி ஆப்பிள் நிறுவனத்திற்கு 22% இறக்குமதி வரியை மிச்சப்படுத்துவதால் எதிர்காலத்தில் விலைகுறைப்பு செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு லாபமாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.