அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் ஃபோன்கள், பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒட்டுக் கேட்பதாக எழுந்த விவகாரம் தேசத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைக்குப் பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை. ஒட்டுக்கேட்கப்படவில்லை என்று தொடர்ந்து மத்திய அரசு மறுத்துவருகிறது.
இதனை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கிவருகின்றன. இதனால் மழைக்கால கூட்டத்தொடரில் தினசரி அமளிகள் நடப்பதால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
இந்த சூழலில், ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல மனுக்கள் போடப்பட்டுள்ளன.
ஃபோன்கள் ஒட்டுக்கேட்புக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ரமணா மற்றும் நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய முதல் பெஞ்ச் முன்பு பட்டியலிடப்பட்டிருந்தன. அதன் விசாரணை இன்று (05/08/2021) உச்ச நீதிமன்றத்தில் நடக்கவிருக்கிறது.