
பிரதமர் மோடி 3 நாள் பயணமாகத் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் இன்று முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறும் 15வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மோடி 3 நாள் பயணமாகத் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் மோடி பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
இன்று முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் மோடி அதன் பின்னர் கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்ஸின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிரீஸ் நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறையென இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.