
காதலியை கொலை செய்த வழக்கில், அர்ச்சகர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட சாய் சூர்யா கிருஷ்ணா என்பவர் கோயில் அர்ச்சகராக இருந்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இருந்தபோதிலும், தனக்கு திருமணமானதை மறைத்து அப்சரா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அந்த பெண்ணுடன் உறவிலும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சாய் கிருஷ்ணாவுக்கு, அப்சரா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதனால், அப்சராவை கொலை செய்ய சாய் கிருஷ்ணா திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஜூன் 3, 2023 அன்று அப்சராவை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு, ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு சுல்தான்பள்ளியில் உள்ள ஒரு இடத்தில் தங்கியுள்ளனர். அதன் பின்னர், அடுத்த நாளான ஜூன் 4ஆம் தேதி அதிகாலையில், அப்சராவை ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை கல்லால் அடித்தே கொலை செய்தார்.
அதன் பின்னர், அப்சாரவின் உடலை சரூர் நகருக்கு கொண்டு சென்று அங்குள்ள ஒரு அலுவலகத்திற்கு அருகில் உள்ள வடிகாலில் அடைத்து, அதை சிமெண்டால் மூடியுள்ளார். அதன் பிறகு, தன் பக்கம் மீதான கவனத்தை திசைதிருப்ப அப்சராவை காணவில்லை என்ற சாய் கிருஷ்ணா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு விசாரித்து வந்த போலீஸுக்கு, சாய் கிருஷ்ணா மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதன்படி, சாய் கிருஷ்ணாவின் செல்போனை பரிசோதித்தனர். அதில், கொலை செய்த உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்பது குறித்து சாய் கிருஷ்ணா கூகுளில் தேடியுள்ளார் என்று தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், கொலை செய்த குற்றத்தை சாய் கிருஷ்ணா ஒப்புக்கொண்டார். இது தொடர்பான வழக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அர்ச்சகர் சாய் கிருஷ்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.