பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் "அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி,அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்பதை இலக்காக வைத்துள்ளோம்" என ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக் கழக துணை வேந்தர் மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 21 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நான் முதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்தல், உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சிறந்த இடத்தை பெறுதல், மாநில கல்விக்கொள்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், புதுமை பெண் திட்டத்தை நடைமுறை படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை குறித்தும் கொள்கைகள் குறித்தும் கலந்து ஆலோசித்தனர். இதில் கால்நடை,மருத்துவம் உள்ளிட்ட ஆறு துறை சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காக போடப்பட்ட விதையே இன்று தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க காரணம் என கூறியுள்ளார். மேலும் "அனைவருக்கும் கல்வி, கல்விக்கேற்ற வேலை இதுதான் திராவிட கொள்கை. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 51% பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி,அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்பதை இலக்காக வைத்துள்ளோம். உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை நமது மாநிலத்தில் செயல் படுத்தவும், மாணவர்களின் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தவும் ஆண்டு தோறும் 50 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்த முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். நீட் தேர்வை பயந்து நாம் எதிர்க்கவில்லை. நீட் உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக உள்ளதால் நாம் எதிர்க்கிறோம். படிப்பு தான் தகுதியை தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதி இருந்தால் தான் படிக்கவே வரவேண்டும் என்று சொல்வது இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி இதனால் தான் எதிர்க்கிறோம்" எனக் கூறினார்.