புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு நாளை காலை 10.15 மணிக்கு பதவி ஏற்கவுள்ளார்.
குடியரசுத் தலைவராக பதவி வகிக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், நாளை பதவியேற்க இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இந்த நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக, தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்போடு நாடாளுமன்றம் அழைத்துவரப்படுவார். அதன் பின்னர் பதவி ஏற்பு விழா தொடங்கும். குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு திரௌபதி முர்மு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அவருக்கு வழங்கப்படும்.