நேற்று முன்தினம் காலை உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு சென்ற மோடி அங்கு பூஜைகள் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் நடைபெறும் சில வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்ட அவர், அதனையடுத்து பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்ய துவங்கினார்.
அடுத்த நாள் காலை வரை சுமார் 17 மணிநேரம் அவர் தியானத்தில் இருந்தார் மோடி. மேலும் கேதார்நாத் கோவிலில் வழிபடும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு ஹரஹர மகாதேவ் என பதிவிட்டிருந்தார். அதேபோல் நேற்று காலை தியானத்தை முடித்து செய்தியாளர்களை சந்தித்த மோடி, கேதார்நாத் கோயிலில் வழிபட்டதை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். எனக்கும் கேதார்நாத்துக்கும் இடையே உணர்வுப் பூர்வமான சிறப்பு தொடர்பு உண்டு. கேதார்நாத்தின் வளர்ச்சிக்காக முழுநேரமும் பணியாற்றி வருகிறேன். இந்தியாவுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் தான் கேதார்நாத்தில் பிராத்தனை செய்தேன். நான் கடவுளிடம் எனக்காக என்று எதுவுமே கேட்கவில்லை என்றார்.
அவர் தியானம் செய்த புகைப்படங்கள் வைரலான நிலையில், சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு மீம்ஸ்களும் அதிகம் பரவியது. இந்நிலையில் அவர் தியானம் இருந்த இன்னும் பெயர் சூட்டப்படாத அந்த குகைக்குள் ஹீட்டர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தியுள்ள கேதார்நாத் கோவில் நிர்வாகம், அந்த குகைக்குள் ஒரு நாள் இரவு தங்கி தியானம் செய்ய 990 ரூபாய் வாடகை நிர்ணயித்துள்ளது.