மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, சட்டம் 2012ன் கீழ் வழங்கப்பட்ட (சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இடஒதுக்கீடு) இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோர் அமர்வு முன்பு இன்று (22-05-24) விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இடஒதுக்கீடு) சட்டம், 2012ன் கீழ், 42 பிரிவினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தப் பிரிவுகளில் பல பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, மார்ச் 5, 2010 முதல் மே 11, 2012 வரை 42 வகுப்புகளை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தும் மாநில அரசின் உத்தரவு சட்டவிரோதமானது. அதனால், அந்த உத்தரவையும், அத்தகைய வகைப்பாட்டைப் பரிந்துரைக்கும் வருங்கால விளைவுகளை கருத்தில் கொண்டு, 42 பிரிவினருக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுகின்றன’ என்று உத்தரவிட்டது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சிறுபான்மையினரின் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை குறைக்க மாநில அரசு அனுமதிக்காது. வெற்றி பெற்ற பிறகு இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இது மீண்டும் ஒரு பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலாக இருந்தது. இதைத்தான் இன்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நான் நீதிமன்றங்களை மதிக்கிறேன்.
ஆனால், ஓபிசி இடஒதுக்கீட்டில் இருந்து முஸ்லிம்களை விலக்கி வைக்க வேண்டும் என்ற தீர்ப்பை நான் ஏற்கவில்லை. ஓபிசி இட ஒதுக்கீடு தொடரும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம். வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி மசோதாவை நாங்கள் தயாரித்து, அமைச்சரவையிலும், சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்டது. அதை முடக்க பாஜக சதி செய்கிறது. ஒரு நீதிபதி, ‘நான் ஆர்.எஸ்.எஸ்.காரன்’ என்று கூறுகிறார், மற்றொருவர் பாஜகவில் இணைகிறார். நீங்கள் எப்படி நீதிபதியாக இருந்து நீதிமன்றங்களைத் தலைமை தாங்க முடியும்?” என்று கூறினார்.