டெல்லியில் கடந்த 11ஆம் தேதி நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரியில் நீர் திறக்க உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், 'காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை. காவிரி பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பது நியதி. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வழக்கம் போல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது கர்நாடகம். விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதி வென்று நீரை பெற்றுத் தருவோம். தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள். நீர் இல்லை என்ற நிலை கர்நாடகத்திற்கு இல்லை. தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் தர வேண்டும் என்ற மனநிலையும் இல்லை. காவிரி பிரச்சனை என்றைக்கு தோன்றியதோ அன்று முதல் இந்த நிலையை கர்நாடக அரசு எடுத்து வருவது வருத்தத்திற்குரியது' என தெரிவித்திருந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் காவிரியில் நீர் திறந்து விட உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பொம்மை தற்போதைய கர்நாடக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அவர் எழுதி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ''தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். கர்நாடகா அணைகளில் உள்ள நீர் பெங்களூருவின் குடிநீர் தேவை மற்றும் கர்நாடக விவசாயிகளுக்கு போதாது' என தெரிவித்துள்ளார்.