கார்த்திகை மாதம் துவங்கியதில் இருந்து தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் இசைக்கச்சேரி நடைபெற்றது. தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் பக்தர்கள் பலமணிநேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் பக்தர்கள் சோர்வடைந்தனர்.
ஐயப்பனின் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களின் அயர்ச்சியைப் போக்கி அவர்களை உற்சாகப்படுத்த சன்னிதானத்தில் நித்தமும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் பிரபல ட்ரம்ஸ் இசைக்கலைஞரின் இசைக்கச்சேரி நடைபெற்றது.
ட்ரம்ஸ் சிவமணியின் இசைக்கச்சேரியை பக்தர்கள் பெரிதும் வரவேற்றனர். இடைவிடாத சிவமணியின் இசை சபரிமலையின் சன்னிதானம் வரை அதிரவைத்தது. மேலும், சிவமணியின் இசை சபரிமலை முழுதும் எதிரொலித்தது என்றும் பக்தர்கள் கூறினர்.