Skip to main content

"பயப்பட வேண்டாம்.. உங்கள் வலிமையை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது" - பிரதமருக்கு ராகுல் கோரிக்கை!

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

rahul gandhi

 

இந்தியா அரசு கரோனவைக் கையாளும் விதம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்துவருகிறார். மேலும், இந்திய அரசின் தடுப்பூசி திட்டம் குறித்தும் விமர்சித்துவருகிறார். இந்நிலையில் இன்று (28.05.2021) காணொளி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியவை:

 

முதல் அலை யாருக்கும் புரியவில்லை. ஆனால் இரண்டாவது அலைக்குப் பிரதமர்தான் பொறுப்பு. அவரது விளம்பரங்களும், தனது பொறுப்புகளை நிறைவேற்ற அவர் தவறியதுமே இரண்டாவது அலைக்கு காரணம். துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் ஒரு நிகழ்ச்சி மேலாளர். அவரால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை சமாளிக்க முடியாது. ஏதாவது நடந்தால், அவர் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வார், அதை மட்டுமே கையாளுவார். இதுபோன்ற சமயங்களில் நிகழ்ச்சி மேலாளருடன் நம்மால் எதுவும் செய்ய முடியாது. நமக்குப் பயனுள்ள மற்றும் விரைவான நிர்வாகம் தேவை.

 

பிரதமர் நாட்டின் தலைவர். அதன் நல்வாழ்வுக்கு அவரே பொறுப்பு. ஆனால் பிரதமர் ஒரு வளையத்துக்குள் வாழ்கிறார். அவர் விஷயங்களைக் கையாளும் விதத்தால் யாரும் அவருடன் பேசுவதில்லை. விளைவு, கப்பல் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் நகர்கிறது. பிரதமர் தனது பிம்பத்தை சரிசெய்ய முயற்சிக்கிறார், ஆனால் அவரது பிம்பம் இல்லாமல் போய்விட்டது. பிரதமர் எழுந்து நின்று நாட்டை வழிநடத்துவதற்கான நேரம் இது. அவர் தனது தலைமை, தைரியம், வலிமை ஆகியவற்றைக் காட்ட வேண்டிய நேரம் இவை. பிரதமர் எழுந்து நின்று செய்து காட்ட வேண்டும். பயப்பட வேண்டாம். நீங்கள் எப்படிப்பட்ட நல்ல தலைவர் என்பதைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

 

இந்தியா தனது தடுப்பூசி திட்டத்தை சரி செய்யாவிட்டால், பல அலைகள் வரும் என பிரதமரிடம் நேரடியாக தெரிவித்தேன். இந்த வேகத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்படுவது தொடர்ந்தால், நாம் மூன்றாவது மற்றும் நான்காவது அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் வைரஸ் உருமாறும். நாம் வளர்ந்துவரும் நோயான கரோனா வைரஸுடன் போரிடுகிறோம். ஆனால் அரசு, எதிர்க்கட்சியுடன் போராடுவதாக நினைக்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்