
இந்தியக் கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக ஏ.ஐ. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதலாவதாக தற்போது கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்த ஏ.ஐ. முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாக மாற்றும் என்றும் மனிதர்களுக்கு மாற்றாக (ஏ.ஐ.) உருமாறும் எனப் பல கருத்துகளை நாம் கேட்டிருப்போம். சமீபத்தில் பல நாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில், கல்லூரிகளில் பாடங்கள் கற்பிக்கும் முறையும் பரவி வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் முதல் பள்ளியாக கேரளா மாநிலத்தில் உள்ள சாந்திகிரி வித்யாபவன் பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துள்ளார்.
அப்போ இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க மாட்டார்களா? சாட் ஜி.பி.டி.யை கொண்டுதான் பாடங்கள் நடத்தப்படுமா என்றும் நினைக்கக் கூடும். ஆனால், தற்போது அந்தளவு திட்டங்களை வகுக்கவில்லை. மாறாக, பள்ளி நிர்வாகம் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளைப் பள்ளி பயன்படுத்த உள்ளது. பாடத்திட்டங்களை வடிவமைப்பது, தாமாகவே கற்றுக்கொள்வது, தேர்வு மதிப்பீடு மற்றும் மாணவர்களுக்கு கூடுதல் உதவி உள்ளிட்ட கல்வியின் பல்வேறு அம்சங்களில் மெஷின் லெர்னிங், இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற (ஏஐ) தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இதனை உருவாக்கியுள்ளனர்.

கேரள பத்திரிகைகளில், சாந்திகிரி பள்ளி, ஐ லேர்னிங் என்ஜின்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்துடனும் வேதிக் இ-பள்ளியுடனும் சேர்ந்து செயல்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஏ.ஐ. கற்றல் முறை திட்டத்தின் செயல்பாட்டில் முன்னாள் தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் மற்றும் துணைவேந்தர்கள் போன்ற வல்லுநர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வேதிக் இ-பள்ளியின் கூற்றுப்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்கு சர்வதேச தரத்துடன் தரமான கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்யும் ஒரு புதுமையான கற்றல் முறையாக இது இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.
இந்த ஏஐ வசதி முதற்கட்டமாக பள்ளியின் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதனுடன் ஏஐ, பல கட்ட தேர்வு மதிப்பீடுகள்; திறன் மேம்பாட்டுத் தேர்வு; நேர்காணலுக்கு உதவுவது; எழுத்து திறனை மேம்படுத்துவது என ஏஐ மூலம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பது. அதற்கான உதவித் தொகைகளை பெறுவது உள்ளிட்டவற்றில் ஏஐ வழிகாட்டும் என்றும் சொல்லப்படுகிறது.