Skip to main content

“டாக்டர் எனக்கு மூளையில கேன்சர்.. அப்பா, அம்மாகிட்ட சொல்லாதீங்க” - 6 வயது சிறுவனின் கோரிக்கை

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

 

தனக்கு புற்றுநோய் இருப்பதை தன் பெற்றோரிடம் கூற வேண்டாம் என 6 வயது சிறுவன் மருத்துவரிடம் கூறியது குறித்த ட்விட்டர் பதிவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “8 மாதங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்களது ஆறு வயது மகனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனின் மூளை  நரம்பில் புற்றுநோய் இருந்ததைக் கண்டறிந்தனர்.

 

இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் மூளையில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதே சமயம், அந்த அறுவை சிகிச்சை ஆபத்தானதும் கூட. அடுத்த சில தினங்களில் மூளையில் இருந்த கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டனர். அறுவை சிகிச்சையின்போது சில மூளை நரம்புகள் துண்டிக்கப்பட்டதால் சிறுவனுக்கு பக்கவிளைவாக வலிப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூளை நரம்பியல் வல்லுநரான என்னிடம் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்தனர்.

 

இதற்காக சிறுவனின் பெற்றோர் முதலில் என்னைச் சந்தித்தனர். அப்போது சிறுவனிடம் புற்றுநோய் பற்றிய தகவல்களைக் கூற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். வலிப்பு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாகவே கூறுங்கள் எனக் கோரிக்கையும் விடுத்தனர். இதற்கு ஒப்புக்கொண்ட பின் சிறுவன் என்னைத் தனியாகச் சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறினர்.

 

சிறுவனை நான் தனியாகப் பார்த்தபொழுது, மற்ற நோயாளிகளைப் போல் இல்லாமல் அவன் முகத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. சிறுவன் என்னிடம் டாக்டர் எனக்கு கேன்சர் இருக்கிறது. அது நான்காம் நிலையைத் தாண்டிவிட்டது என்பதும் எனக்கு தெரியும். இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே நான் உயிரோடு இருப்பேன். இந்த விஷயத்தை என் பெற்றோரிடம் கூறாதீர்கள். இது அவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் உடைந்து விடுவார்கள். அளவுக்கு அதிகமாக அவர்கள் என்னை விரும்புகிறார்கள் என்று கூறினான். இதைக் கேட்டு நான் கண்கலங்கி விட்டேன். இதனைப் பற்றி அவனின் பெற்றோரிடம் கூறிய பொழுது அவர்களும் அழுதனர். எட்டு மாதங்கள் கழித்து சிறுவனின் பெற்றோர் என்னை மீண்டும் சந்தித்தனர்.

 

நான் சிறுவனைப் பற்றி விசாரித்தேன். அதற்கு அவர்கள், ‘டிஸ்னி வேர்ல்டுக்கு செல்ல வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். நாங்கள் எங்களது வேலையில் இருந்து தற்காலிகமாக விலகி அவனை அழைத்துச் சென்றோம். கடந்த மாதம் அவன் எங்களை விட்டு பிரிந்துவிட்டான். ஆனால் 6 மாதங்கள் நாங்கள் அவனுடன் சந்தோசமாக இருந்தோம். அவனுடன் நாங்கள் செலவிட்ட நாட்கள் என்றென்றும் எங்கள் நினைவில் இருக்கும்’ என்று கூறினர்.” என  இது குறித்து நீண்ட பதிவினை வெளியிட்டிருந்தார். இணையத்தில் தற்போது அது வேகமாகப் பரவி வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்