தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அதனை நேற்று தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழக அரசும் அனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. ஆளுநரின் செயல்களை கண்டிக்கும் விதமாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த பல்வேறு அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பியது. மாநிலங்களவையில் இதுதொடர்பாக பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, " ஒரு மாநில அரசு அனுப்பிய மசோதாவை ஒரு ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும்" என்று கேள்வி எழுப்பினார். ஆளுநருக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து திமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.