இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், சாமானியர்களைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "எனக்குக் காய்ச்சலும், இருமலும் லேசாக இருந்தது. இதையடுத்து, கரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியானது. தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். இருப்பினும், மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். என்னை மருத்துவர்கள் நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள்.
உங்கள் வாழ்த்துகள், ஆசிகளுடன் விரைவில் குணமடைந்து திரும்புவேன். என்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பிலிருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.