Skip to main content

அறிமுகப்படுத்திய ஒரே நாளில் 275 கோடிக்கு வர்த்தகம்

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

digital currency; 275 crore trade

 

நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நேற்று அறிமுகம் செய்தது.

 

இதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையின் போது காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருந்தார். இந்நிலையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி நாடு முழுவதும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

அரசின் கடன் பத்திரங்களை வாங்கவோ விற்கவோ, வங்கிகள் டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்துவதற்காக முதற்கட்டமாக நேற்றில் இருந்து சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சிகளைப் பயன்படுத்தி அரசின் பத்திரப் பறிமாற்றங்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் ஒரு மாதத்தில் சில்லறை வணிகப் பிரிவிலும் டிஜிட்டல் கரன்சிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

டிஜிட்டல் கரன்சி சோதனை முயற்சியில் பங்கு கொண்ட ஒன்பது வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி மூலம் 48 பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் 275 கோடிக்கு அரசு கடன் பத்திரங்களின் வர்த்தகம் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

 

ரூபாயின் மதிப்பிற்கு நிகராக டிஜிட்டல் கரன்சியின் மதிப்பு இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் கரன்சிக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்